முருகன், கிருஷ்ணர், மகாலட்சுமி, அனுமன் என ஒவ்வொரு தெய்வங்களுக்கும் பிறந்த நாள் விழா வருவதுபோல், விநாயகருக்குரிய பிறந்த நாள் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினமாகும்.
விநாயகர் சதுர்த்தி தினம் ஏற்பட்டதற்கு புராண ரீதியாக 2 காரணங்கள் உள்ளன. ஒரு சமயம் கைலாயத்தில் களி மண்ணால் செய்த வடிவத்திற்கு பார்வதி தேவி உயிர் கொடுத்து, காவலாக நிற்க வைத்து குளிக்க சென்றாள்.
அப்போது அங்கு வந்த சிவபெருமானை, அந்த சிறுவன் தடுத்து நிறுத்தியதால், கடும் கோபத்துடன் அவனது தலையை வெட்டினார். அதன் பின்னர், சிவகணங்களை அனுப்பி, அருகில் இருந்த யானையின் தலையை வெட்டி சிறுவனுக்கு பொருத்தி உயிர்ப்பித்தார்.
அதைக்கண்ட பார்வதி தேவி, யாரிந்த பிள்ளை என்று சிவபெருமானிடம் கேட்டாள். சிவனும் நடந்ததை கூறிய பின்னர், தன்னால் உருவாக்கப்பட்ட பிள்ளையே என்று கருதி பிள்ளையார் என்று பெயரிட்டாள். இது ஒரு ஆவணி வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று நடந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு காரணமாக, யானை முகமும், மனித வடிவும் கொண்ட அசுரன் கஜமுகாசுரனை, ஒரு ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று, விநாயகர் வதம் செய்தார். அன்று முதல் இந்த நாளை விநாயகர் சதுர்த்தி தினமாக எல்லோரும் கொண்டாடுகின்றனர்.
வரலாற்றில் விநாயக சதுர்த்தி விழா நெடுங்காலமாக இருப்பினும், 1655-ஆம் ஆண்டு மராட்டிய பேரரசை உருவாக்கிய மன்னர் சத்ரபதி சிவாஜி, விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாடியதாக வரலாறு கூறுகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் சுதந்திர போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு விநாயக சதுர்த்தி விழாவை பாலகங்காதர திலகர் 1893-ஆம் ஆண்டு தேசிய விழாவாக கொண்டாடினார். அதன் பின்னரே, நாடு முழுவதும் பிரபலமடைந்தது.
விநாயக பெருமானுக்கு மிகவும் பிடித்ததாக அருகம்புல் கருதப்படுகிறது. அனலாசுரன் என்பவனை வதம் செய்வதற்காக, விநாயகர் அவனை விழுங்கியபோது, முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அருகம்புல் சாற்றி அவரை குளிர்வித்தனர். அதனால் அருகம்புல் விநாயகருக்கு உரியதாயிற்று.
விநாயக சதுர்த்தியன்று அவருக்கு பிடித்த அவல், பொரி, கொழுக்கட்டை, பொட்டுக்கடலை, கரும்பு, அப்பம், இளநீர், எள்ளுருண்டை, வெள்ளரி, விளாம்பழம், நாவற்பழம் போன்றவற்றை படைத்து வணங்குவது நல்லது.
விநாயக சதுர்த்தியன்று விரதமிருந்து வழிபட வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும். செய்யும் தொழில் நன்கு வளர்ச்சியடைந்து அதிக லாபம் கிடைக்கும். அதனால், சந்தோசம், மகிழ்ச்சி நிலவும். மேலும், ஐஸ்வர்யம் கிடைத்து உயர்ந்த அந்தஸ்து ஏற்படும்.