தலைவலி வராமல் தடுப்பது எப்படி?

தலைவலியா ஒரு மெட்டாசின் போட்டுக்கோ என்று வீட்டில் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிக அதிகமாகக் காணப்படும் ஆரோக்கியப் பாதிப்புகளில் தலைவலி முதன்மையானது. காய்ச்சலைப் போலவே தலைவலியும் ஒரு நோயின் அறிகுறியே. பெரும்பாலான தலைவலிக்குக் காரணமே இருக்காது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அவற்றை சாதாரண தலைவலி என்கிறோம். அதேநேரத்தில், ஆபத்தான தலைவலிகளும் உள்ளன. தலைவலி எப்படி வருகிறது என்றால் உடலில் தொற்றுக்கிருமிகள் அழற்சியை ஏற்படுத்தும்போதும் இரத்தத்தில் செரட்டோனின், குளட்டமேட் முதலிய சில வேதிப்பொருள்கள் அதிகமாக உற்பத்தியாகும்போது, மூளையில் உள்ள இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அப்போது அருகில் உள்ள நரம்புகள் அழுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, மூளைக்குள் நரம்புகள் தூண்டப்படும்போது, தலையில் வலிப்பது போன்று ஓர் உணர்வு உண்டாகிறது. இதுதான் தலைவலி. தலைவலி வருவதற்கு காரணம், அதன் வகைகள், தலைவலியை உண்டாக்கும் உணவுகள், அதற்கான முதலுதவி, தலைவலி வராமல் தவிர்ப்பது எப்படி போன்றவைகளை இதில் பார்க்கலாம்.

தலைவலிக்குக் காரணங்கள்

மனஅழுத்தம், உறக்கமின்மை, சோர்வு, உணவுகள், புகைபிடித்தல், மது அருந்துதல், மாசடைந்த சுற்றுச்சூழல், செயற்கை வாசனை திரவியங்கள், பலத்த ஓசை, காற்றோட்டமில்லாத அறை, அதிக வெளிச்சம், விட்டு விட்டு ஒளிரும் விளக்குகள் முதலியவை ஆகும்.

தலைவலியின் வகைகள்

மன அழுத்தத் தலைவலி: மன அழுத்தம் காரணமாக இப்போது தலைவலி அதிகரித்து வருகிறது. குடும்பப் பிரச்சனைகள், செய்யும் வேலை முதலியவை இதற்கு காரணம்.

ஒற்றைத் தலைவலி: தலையின் முன்புறத்தில் ஒரு பக்கம் மட்டும் வலிப்பது இதன் முக்கிய அறிகுறி. அதிக ஒளியைப் பார்ப்பதால் கண்கள் கூசுவது, மங்கலான பார்வை, ஒரு கை மட்டும் மரத்துப்போவது, வாந்தி வருவது முதலியவை இதற்குரிய அறிகுறிகள்.

கொத்துத் தலைவலி: கண்களைச் சுற்றிக் கொத்தாக வலிக்கும். குறைந்தது ஒரு மணி நேரம் வலி நீடிக்கும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தலைவலி வரும்.

சைனஸ் தலைவலி: கண்களுக்கு மேலும் கீழும் வலி ஏற்படும். மூக்கில் சளி பிடிக்கும். மூக்கு அடைக்கும் அல்லது மூக்கு ஒழுகும்.

தலைவலியை உண்டாக்கும் உணவுகள்

சாக்லேட், ஊறுகாய், வாழைப்பழம், பாலாடை, எலுமிச்சை, நிலக்கடலை, முந்திரி, பாதாம், பர்கர், பீட், கடல் உணவுகள், செயற்கை உணவுகள்.

முதலுதவி

போதியளவு ஓய்வெடுத்துக்கொண்டால், சாதாரண தலைவலி சரியாகிவிடும்.

அடுத்ததாக, தலையைச் சிறிது நேரம் அழுத்திக் கொடுக்கலாம். இளஞ்சூடான தண்ணீரில் துணியை நனைத்து ஒத்தடம் தரலாம்.

மனதை அமைதிப்படுத்த இனிய இசையை கேட்கலாம்.

தவிர்ப்பது எப்படி?

தினமும் பழம், காய்கறி, கீரை சாப்பிடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

போதிய அளவு ஓய்வும், உறக்கமும் தேவை.

நீண்ட நேரம் கணினியில் பணி செய்யும்போதும், டைப் அடிக்கும்போதும் சரியான நிலையில் உட்காருங்கள்.

தொலைக்காட்சியை மிக அருகில் உட்கார்ந்து பார்க்காதீர்கள். குறைந்தது பத்து அடி இடைவெளி தேவை.

படுத்துக்கொண்டே படிக்காதீர்கள்.

தியானம், யோகாசனம், மூச்சுப்பயிற்சிகள் இவற்றில் ஒன்றைத் தினமும் செய்வது நல்லது.

தலைவலியைத் தூண்டும் காரணிகளைத் தவிருங்கள்.

அடிக்கடி தலைவலி வருபவர்களுக்கு மட்டுமன்றி, தலைவலி வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கு பயன்படும் இக்கட்டுரையை அனைவருக்கும் பகிருங்கள்.(ஷேர்)



Follow Us on